புது தில்லி, நவ.24
மெட்டா, டுவிட்டர், கூகுள், அமேசான் நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்பி நிறுவனமும், ஆள்குறைப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி 6,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது, அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 12 சதம் ஆகும். மேலும், இந்நிறுவனம், அதன் நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4,000த்திலிருந்து, 6,000 பேரை, 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில், லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை அதிகரித்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. விற்பனை சரிவு மட்டுமின்றி; பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவையும், நிறுவனத்தின் இந்த செலவைக் குறைக்கும் முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.