புது தில்லி, டிச.10
5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தேவுசிங் சௌஹான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த அக்.1ம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த நவ.26ம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் விரைவான தொலைத்தொடர்பு வசதிக்காகவும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை விரிவுப்படுத்தவும் அரசு பல்வேறு கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு, அலைக்கற்றை பங்கீடு மற்றும் பங்கீட்டின்போது கூடுதல் அலைக்கற்றை பயன்பாடு கட்டணத்தில் 0.5 சதம் குறைப்பு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.