December 8, 2022

50 சதப் பணியாளர் குறைப்பை தொடங்கியது டுவிட்டர்

சான்பிரான்ஸிஸ்கோ, நவ.5

டுவிட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளர்களில் 50 சதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

பணியாளர் குறைப்பு நடவடிக்கை இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிநீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சக பணியாளர்கள் பலருக்கு பணிநீக்கம் தொடர்பான தகவல் மின்னஞ்சல் வழியாக கிடைத்துள்ளது என இந்திய ட்விட்டர் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 200க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் துறைகளில் பணியாற்றிய அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌயாகி உள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை இந்திய பணியாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எந்தனை பேர் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா என்றும் ட்விட்டர் தகவல் வெளியிடவில்லை.

பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பல்வேறு நாட்டு அரசுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள டுவிட்டர் நிறுவனம், பணியாளர்கள் நீக்கம் தொடர்பான அலுவலக ரகசியங்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது என ஊழியர்களுக்கு தடை விதித்துள்ளதை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Spread the love