December 8, 2022

5 கோடி டவுன்லோடுகளை கடந்தது கூ தளம்

பெங்களூரு, நவ.3

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூ சமூக வலைதளம் 5 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சமூக வலைதள சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், ட்விட்டருக்கு மாற்று என சொல்லப்படுகிறது. தமிழ் உட்பட மொத்தம் 10 மொழிகளில் இதன் சேவை கிடைக்கப்பெறுகிறது. கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் ட்விட்டருக்கு எதிரான கருத்துகள் எழுந்திருந்தது. ட்விட்டரை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த ஜனவரி முதல் இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,500 ஹை-புரொபைல் பயனர்கள் உட்பட மில்லியன் கணக்கிலான மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர்கள், கவிஞர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் சொந்த மொழியில் பதிவுகளை பகிர்ந்து வருவதாக கூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூ நிறுவனத்தின் சிஇஓ அப்ர மேயா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் தங்கள் நிறுவனம் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு தரப்பில் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது கூ. தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் கூ இயங்கி வருகிறது.

Spread the love