December 8, 2022

30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட வெளிநாட்டு வர்த்தகம் முக்கியப் பங்காற்றும்: கோயல்

புது தில்லி, அக்.29

அடுத்த 25 ஆண்டுகளில் 30 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2,474 லட்சம் கோடி) மதிப்புடைய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாட்டு வர்த்தகம் முக்கியப் பங்காற்றும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

அமிர்த காலத்தில், 30 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க லட்சிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உண்மையிலேயே நமக்கு உதவப் போவது வெளிநாட்டு வர்த்தகமே. இப்பாதையில் நாம் பயணிக்கும்போது இலக்கை எட்டுவது சாத்தியமாகும்.

இந்தியாவின் பொருளாதார மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் 11.8 மடங்கு உயர்ந்து, தற்போது 3.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. உலகில் மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ள சூழலில், இந்தியா மட்டும் பிரகாச ஒளியாகத் திகழ்கிறது. வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதால், உலக நாடுகள் இந்தியாவுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை நோக்கி நாம் பயணித்து வருவதால், நமது இறக்குமதிகளும் ஏற்றுமதிகளும் பன்மடங்கு உயரவுள்ளன. இதுபோன்ற சூழலில், தடையற்ற வெளிநாட்டு வர்த்தகம், பொருள்களின் போக்குவரத்து மற்றும் சேவைகள் மிகவும் அவசியமாகும். இந்தியாவுடன் மென்மேலும் வர்த்தகம் புரிய உலக நாடுகள் விரும்புகின்றன. இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு அவை ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவை வளர்ந்த நாடு என்ற அந்தஸ்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை இளைஞர்கள் தங்களது தோளில் சுமக்க வேண்டும் என்றார்.

Spread the love