புது தில்லி, நவ.28
2024ம் ஆண்டு முதல் காலாண்டில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டில் ஸ்லீப்பர் பெட்டி வசதிகளுடன் தயாராகி வரும் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் 2024ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இயங்க தொடங்கும். இது மட்டுமல்லாமல் 10 முதல் 12 லட்சம் கிலோ மீட்டர்கள் வரையிலும் பயணிக்கக் கூடிய 75 வந்தே பாரத் ரயில்கள் ஏற்றுமதிக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்வதற்கான சூழல் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 475 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம்.
மேலும், தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் அகல ரயில் தடத்தில் பயணிக்கக் கூடியவை. இந்நிலையில், உலக நாடுகளில் இருக்கும் வழக்கமான தடங்களில் ரயில்களை இயங்க வைக்கும் வகையில் அவற்றின் உற்பத்தி மாற்றியமைக்கப்படும். 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. நல்ல அகலமான சாலையில் உள்ள வளைவுகளில் கூட மோட்டர் பைக்குகள் லாவகமாக வேகத்துடன் பயணிப்பதைப் போல, தடங்களில் உள்ள வளைவுகளிலும் லாவகமாக பயணிக்கும் 100 வந்தே பாரத் ரயில்கள் 2025 – 26 காலகட்டத்திற்குள் உற்பத்தி செய்யப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் 400 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் 100 ரயில்களில் இடம்பெற்றிருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.