October 3, 2022

2029ம் ஆண்டுக்குள் 3வது நாடாக
இந்தியா மாறும்: ஐஎம்எஃப் தகவல்

புது தில்லி, செப்.5

உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் வெளியிட்டது.

அதில், உலகின் பொருளாதார பலமிக்க டாப்-10 நாடுகளின் பட்டியலில், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பல, பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, இங்கிலாந்தை அது முந்தியுள்ளது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான சவுமியா காந்தி கோஷ், 2030ம் ஆண்டு வரையிலான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டில் உலக பொருளாதார பலமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவு, 6 முதல் 6.5 சதம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போதுள்ள வளர்ச்சி விகிதம் நீடித்தால், இது 6.7 முதல் 7.7 சதம் உயரவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், 6.5 சத ஜிடிபி வளர்ச்சியை கணக்கிட்டாலே, வரும் 2027ம் ஆண்டில் ஜெர்மனியையும், 2029ம் ஆண்டில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்,’ என தெரிவித்துள்ளார். உலகளவில் சீனாவின் பொருளாதாரம் தற்போது தள்ளாட்டம் கண்டு வருகிறது. உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதற்கு, இந்த நிலை மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. மேலும், செல்போன் ஜாம்பவன் நிறுவனமான ஆப்பிள், தனது ஐபோன்-14 மாடல் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ முடிவு செய்திருப்பதும், இந்தியாவுக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

Spread the love