February 2, 2023

2022ல் 12.32 கோடி உள்நாட்டுப் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்

புது தில்லி, ஜன.20

2022ம் ஆண்டுக்கான உள்நாட்டு விமானப் போக்குவரத்து தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விமானப் போக்குவரத்தில் கோவிட்டிற்கு முந்தைய நிலை கிட்டத்தட்ட திரும்பியுள்ளது எனலாம். 2022ல் 12.32 கோடி உள்நாட்டுப் பயணிகள் விமானத்தில் பறந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிக கெடுபிடிகள், ஊரடங்கு போன்ற காரணத்தால் 2020 முழுவதும் சுணக்க நிலையே காணப்பட்டது. அந்தாண்டு 6.3 கோடி உள்நாட்டுப் பயணிகள் மட்டுமே பயணித்தனர். 2021ல் இது 8.38 கோடியாக அதிகரித்தது. 2022ல் 50% அளவு உயர்ந்து 12.32 கோடியாக பதிவாகியுள்ளது. இருப்பினும் கோவிட்டிற்கு முந்தைய ஆண்டான 2019 உடன் ஒப்பிடும் போது இது குறைவு தான். 2019ல் 14.41 பயணிகள் உள்நாட்டு விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் இண்டிகோ நிறுவனம் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ல் 56 சதம் சந்தைப் பங்கை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. பிற நிறுவனங்கள் எதுவும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9.2% சந்தையைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் விஸ்தாரா உள்ளது. கோ பர்ஸ்ட் 8.8%, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் இரண்டும் சுமார் 8.7% பங்கைப் பெற்றன. இண்டிகோவில் 2022ல் சுமார் 7 கோடி பயணிகள் பறந்துள்ளனர். மாதா மாதம் இந்த எண்ணிக்கை உயர்ந்து வந்துள்ளது. டிசம்பரில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் இண்டிகோவில் ஏறியுள்ளனர். விஸ்தாராவில் 1 கோடியே 13 லட்சம் பேர் பயணித்துள்ளனர். வருவாயிலும் இவ்விரு நிறுவனங்கள் சிறந்த நிலையில் உள்ளன.

Spread the love