December 8, 2022

2021-2022ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் ரூ.7800 கோடி நஷ்டத்தை சந்தித்தது

பெங்களூரு, நவ.9

பிளிப்கார்ட் நிறுவனம் 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.7800 கோடிக்கும் அதிக அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 46 சதம் அதிகமாகும்.

பிளிப்கார்ட் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் பி2பி பிரிவான பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனம் மட்டும் கடந்த ஆண்டு 2,907 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்த நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் 4,399 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

பிளிப்கார்ட் இந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.2445.6 கோடி அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.3413 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால் பிளிப்கார்ட் -இன் நிகர வருமானம் 2021-22 ஆம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துச் சுமார் 61,836 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் பிளப்கார்ட் இந்தியா 51,176 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று அதிகப்படியான பங்களிப்பை அளித்துள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் இண்டர்நெட் 10,660 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட்சீரின் கூற்றுப்படி, இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் மொத்த விற்பனையில் அமேசான், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை ஓரம்கட்டி பிளிப்கார்ட் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. செப்டம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற பண்டிகைக் கால விற்பனை-யின் மொத்த அளவீட்டில் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் சுமார் 62 சதம் அல்லது ரூ.24,800 கோடி மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 40,000 கோடி ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் போட்டியை சமாளித்து முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

Spread the love