December 9, 2022

2வது முறையாக ஜிஎஸ்டி வசூல்
1.50 லட்சம் கோடியைக் கடந்தது

புது தில்லி, நவ.1

ஜிஎஸ்டி வரி ஒரு மறைமுக வரியாகும். இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய நிதித்துறை அமைச்சகம் மாதம் தோறும் ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூலை குறித்து வெளியிட்டுள்ளது. அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான ஜி.எஸ்.டி. வரியை விட 16.6 சதவீதம் அதிகமாகும். ஒரு மாதத்தில் அதிக வசூலான 2-வது தொகை இதுவாகும்.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது.

இதன் மூலம், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும்.

மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது


Spread the love