January 24, 2023

1,200 மின்சார ரயில் இன்ஜின்களை தயாரிக்க சீமென்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி, ஜன.19

இந்திய ரயில்வேக்கு, 9 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட 1,200 மின்சார ரயில் இன்ஜின்களை தயாரிக்க, ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில், சீமென்ஸ் நிறுவனம் கையயழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது, இந்தியாவில் தங்களின் மிகப்பெரிய ஆர்டர் என, சீமென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சீமென்ஸ் நிறுவனம், குஜராத்தில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,200 மின்சார இன்ஜின்களை தயாரித்து, இந்திய ரயில்வேக்கு வழங்கும். மேலும், இந்த ஒப்பந்தம், இந்திய ரயில்வேயின் ரயில் மின்மயமாக்கல் பணியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் மின்சார ரயில் இன்ஜின்களை உருவாக்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த இன்ஜின்கள் குஜராத்திலுள்ள இந்திய ரயில்வேயின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். விசாகப்பட்டினம், ராய்ப்பூர், காரக்பூர் மற்றும் புனே ஆகிய நான்கு இடங்களில், இன்ஜின்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

வரும் நாட்களில், கனரக போக்குவரத்துக்கு இந்த இன்ஜின்கள் பயன்படுத்தப்படும். இந்த ரயில் இன்ஜின்கள் 4,500 டன் சுமைகளை ஏற்றிச் செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் செல்லும். உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் நெட்வொர்க்கை உருவாக்கும் இந்தியாவின் லட்சியத்தை அடைய, இந்த ஒப்பந்தம் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Spread the love