February 2, 2023

112 மாவட்டங்களில் கடன் வழங்கலை அதிகரிக்க வேண்டும் வங்கிகளுக்கு நிதியமைச்சர் வேண்டுகோள்

புது தில்லி, ஜன.21

நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 112 மாவட்டங்களில் கடன் வழங்கலை மேலும் அதிகரிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் உள்ள 112 வளர்ந்து வரும் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அதிகாரிகள், வங்கி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நீதி ஆயோக் அதிகாரிகள், மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சகம் சார்பில்வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளர்ந்து வரும் மாவட்டங்களில் கடன் வழங்கலை மேலும் அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு வங்கிக் கிளை செயல்படுவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு கிராமங்களில் நிதிசார் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. அத்தகைய நடவடிக்கைகள் வங்கி சேவைகளைக் கூடுதல் எண்ணிக்கையிலான மக்களிடம் கொண்டுசேர்க்கும். சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களுக்கும் அதிக கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகள் வழங்குவது தொடர்பாகவும் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வளர்ந்து வரும் மாவட்டங்களின் வளர்ச்சிசார் இலக்குகளை அடுத்த 6 மாதங்களுக்குள் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள 112 மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டு தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love