October 4, 2022

11 வழித்தடங்களில் ரயில் வேகத்தை
அதிகரிக்க திட்டம்: தெற்கு ரயில்வே

சென்னை, செப்.21

தெற்கு ரயில்வேயில் இந்த நிதி ஆண்டில் 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரையும், 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த நிதி ஆண்டில் (2022-23) தெற்கு ரயில்வேயில் 11 வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – கூடூர், சென்னை சென்ட்ரல் – அத்திப்பட்டு, சென்னை – அரக்கோணம் – ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த வழித்தடங்களில் மணிக்கு அதிகபட்சம் 145 கி.மீ. வேகம் வரை ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த நிதி ஆண்டில் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தஞ்சாவூர் – பொன்மலை, விருத்தாசலம் – சேலம், விழுப்புரம் – புதுச்சேரி, மதுரை – திருநெல்வேலி, விழுப்புரம் – காட்பாடி, அரக்கோணம் – செங்கல்பட்டு, திருநெல்வேலி – தென்காசி, திருநெல்வேலி – திருச்செந்தூர், தஞ்சாவூர் – நாகர்கோவில் ஆகிய 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் நிதி ஆண்டில், 45 நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. 2022-23-ம் நிதி ஆண்டில் ஜூலை வரை 10 நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் 68 வேகக் கட்டுப்பாடுகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 19 ரயில் நிலையங்களிலும், இந்த நிதி ஆண்டில் 11 ரயில் நிலையங்களிலும் சர்வதேச பாதுகாப்பு தரத்திலான நவீன சிக்னல் முறை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love