December 8, 2022

வோடபோன் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.7,600 கோடி

மும்பை, நவ.4

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு கடந்த காலாண்டில் ரூ.7,300 கோடியாக இருந்தது, ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரூ.7,600 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளதாவது: செப்டம்பர் காலாண்டில் வோடபோன் ஐடியாவின் வருவாய் சுமார் 2% உயர்ந்து ரூ.10,615 கோடியாக உள்ளது. ஒரு பயனர் மூலம் கிடைக்கும் வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.128ல் இருந்து ரூ.131க்கு உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர மதிப்பு நெகடிவில் ரூ.76,416 கோடியாக இருக்கிறது. அதாவது சொத்துக்களை கடன் அதிகம் உள்ளது.

முதல் காலாண்டில் ரூ.840 கோடியாக இருந்த மூலதனச் செலவு, தற்போது ரூ.1,200 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 24.4 கோடியிலிருந்து, 23.4 கோடியாக குறைந்துள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி வோடபோன் ஐடியாவின் மொத்தக் கடன் ரூ. 2.2 லட்சம் கோடி. இதில் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ. 1.4 லட்சம் கோடி. தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய பாக்கி ரூ.68,600 கோடி ஆக உள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் நிறுவனத்தின் கையிருப்பு ரொக்கம் ரூ.190 கோடியாக உள்ளது.

இந்நிலையில் வோடபோனின் ரூ.16,000 கோடி ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கான வட்டியை அரசாங்கம் 33% பங்குகளாக எடுத்துக்கொள்ள உள்ளது. முன்னதாக பங்குகளின் விலையை அதிகரிக்க அதிக மூலதனத்தை வோடபோன் செலுத்த வேண்டுமென அரசு விரும்புகிறது.

Spread the love