January 26, 2023

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது பிரதமர் நரேந்தி மோடி தகவல்

PM distributes 71,000 appointment letters under Rozgar Mela via video conferencing on January 20, 2023.

புது தில்லி, ஜன.20

வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பணிநியமனங்களை பெற்றவர்களிடையே பேசிய பிரதமர்,

இந்த 2023-ம் ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 71,000 குடும்பங்களுக்கு விலைமதிப்பற்ற பரிசாக அரசுப்பணி நியமனம் கிடைத்துள்ளது என்றார். புதிதாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அரசு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதன் மூலம் பணிநியமனம் பெற்றவர்களுக்கும், கோடிக்கணக்கான அவர்களது குடும்பங்களுக்கும் புத்தம் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அதன் விளைவாக லட்சக்கணக்கான புதிய குடுமபங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் கிடைக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அசாம் மாநில அரசு நேற்று தான் இது போன்ற வேலைவாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது என்றும் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளது என்றார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரசின் குறியீடாக அமைகிறது என்றும் இந்த அரசு என்னென்ன தீர்மானங்களை செயல்படுத்தி வருவது குறித்து எடுத்துக் காட்டி வருவதாக கூறியுள்ளார்.

புதிதாக பணி நியமன ஆணை பெற்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தாம் தெளிவாக காணமுடிவதாக பிரதமர் கூறினார். இவர்களின் பெரும்பாலானோர் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் எனவும் அவர்களில் பலர் கடந்த 5 தலைமுறைகளில் முதல் முறையாக அரசுப் பணியைப் பெறுபவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிப்படையான மற்றும் தெளிவான பணி நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பதாரர்களின் திறன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினார். மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரை நியமன நடைமுறைகள் மேம்பட்ட வகையில் முறைப்படுத்தப்பட்டு, காலவரையறைக்கு உட்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும், வேகமும் தற்போது அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் காணப்படுவதாக அவர் கூறினார். முன்பு வழக்கமான பதவி உயர்வு, உள்ளிட்ட நடைமுறைகள் கூட மெதுவாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் நடைபெற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வெளிப்படையான நடைமுறைகளை உறுதி செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பணி நியமனமும், பதவி உயர்வும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

இன்று பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களுக்கு இது ஒரு புதிய பயணம் என்று குறிப்பிட்ட பிரதமர், அரசு இயந்திரத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருந்து பங்களிப்பை வழங்குவது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அவர்களும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். புதிதாய பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் பணியாளர்களாக பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போது அவர்களது வாழ்விலும், தாக்கங்கள் ஏற்படும் என்று அவர் கூறினார். நுகர்வோர் எப்போதும் சரியானவர்கள் என வணிகம் மற்றும் தொழில்துறையில் கூறுவதைப் போல், மக்கள் சரியானவர்கள் என்ற தாரக மந்திரத்தை நிர்வாகத்தில், அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். இது சேவை மனப்பான்மையை அதிகரித்து வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ஒருவர் அரசுத்துறையில் பணி நியமன ஆணை பெறுவது பணி அல்ல என்றும் அது அரசு சேவை என்றும் பிரதமர் தெரிவித்தார். 140 கோடி மக்களுக்கு சேவை வழங்கும் மகிழ்ச்சியை இது வழங்கும் என்றும் இது மக்கள் மத்தியில், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஐகாட் தளத்தில் இணையதளம் வாயிலாக பல அரசு ஊழியர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தத் தளம் அலுவல் ரீதியான பயிற்சிகளைத் தவிர தனிநபர் மேம்பாட்டுக்கான பல வகுப்புகளையும் கொண்டுள்ளது என்றார். தொழில்நுட்பத்தின் மூலமாக தாமகவே கற்றுக் கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறினார். இதற்கு தாமே ஒரு உதாரணம் என்று கூறிய பிரதமர், எப்போதும் கற்கும் நோக்கிலேயே தாம் செயல்படுவதாகவும் அந்த மனப்பான்மையை விட்டது இல்லை என்றும் தெரிவித்தார். சுயகற்றல் மனப்பான்மை கற்பவரின் திறன்களை மேம்படுத்தும் என்றும் அதன் மூலம் அவரைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் நாட்டின் திறன்களும் மேம்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வேகமாக மாறிவரும் நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் சுயவேலைவாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார். வேகமான வளர்ச்சி, சுயவேலைவாய்ப்பை பெரிய அளவில் விரிவுப்படுத்துவதாகவும் இன்றைய இந்தியாவில் இது நன்கு உணரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டு அணுகுமுறையுடன் கடந்த 8 ஆண்டுகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ரூ.100 லட்சம் கோடி முதலீடு உள்கட்டமைப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், புதிய சாலைகள், உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் வேலைவாய்ப்புகளை எவ்வாறு அதிகரிக்கும் என்பதையும் எடுத்துரைத்தார். புதிய சாலைகள் மூலம் புதிய சந்தைகளும் உருவாகும் என்று அவர் தெரிவித்தார். புதிய சாலைகள் அல்லது ரயில்வே வழித்தடங்கள் விளை நிலங்களிலிருந்து உணவு தானியங்களை எளிதில் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல வகை செய்யும் என்றும் சுற்றுலாவும் இவற்றின் மூலம் வளரும் என்றும் அவர் தெரிவித்தார். இவை அனைத்துமே வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

பாரத் நெட் திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதை எடுத்துரைத்த அவர், இதன் மூலமும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார். தொழில்நுட்பங்களில் அவ்வளவாக நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூட இவற்றின் பலன்களை உணரமுடியும் என்று அவர் கூறினார். இணையதள சேவைகளை கிராமங்களில் வழங்குவதன் மூலம் புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார். 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் புத்தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி உலகில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.


Spread the love