November 29, 2022

வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை
பரோடா வங்கி குறைத்தது

மும்பை, நவ.15

நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பரோடா வங்கி, தாங்கள் அளிக்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதம் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை அந்த வங்கி 1 சதம் வரை அதிகரித்துள்ளது. இது குறித்து பரோடாட வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதம் குறைக்கப்பட்டு 8.25 சதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பிரிவில் முன்னிலை வகிக்கும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி-யைவிட இந்த வட்டி விகிதம் குறைவாகும். வீட்டுக் கடன்களுக்கு அந்த வங்கிகள் தற்போது 8.40 சதம் வட்டி வசூலித்து வருகின்றன.

இது தவிர, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 சதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, 46 முதல் 180 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 4 சதமாக இருந்த வட்டி விகிதம் 4.5 சதமாக உயர்கிறது. ஒராண்டுக்கான வைப்பு நிதிகளுக்கு 5.5 சதத்திலிருந்து 6.1 சதமாகவும் 3 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 6.25 சதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love