December 9, 2022

விரைவில் மக்கள் தொகை சீனாவை
இந்தியா முந்திவிடும்: ஐ.நா தகவல்

நியூயார்க், நவ.14

விரைவில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் எனவும் மேலும், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023ம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐநா கணித்துள்ளது.

அதோடு வரும்காலத்தில் உலகின் மக்கள் தொகை பெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கணிப்பையும் ஐநா சபை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 2030ம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள்,லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கும் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து விடும் என்பதால் மக்கள் தொகைப் பெருக்கத்தில் சுணக்கம் ஏற்படும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் தொகை அதாவது 25 முதல் 64 வயதுவரையிலான மக்கள் தொகை அதிகம் இருக்கும் எனவும், இதனால் பொருளாதாரம் உயர்ந்து தனி மனித வருவாயும் அதிகரிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது. இது நம்முடைய பன்முகத்தன்மையை கொண்டாடும் நேரம் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love