September 27, 2022

வரும் ஆண்டுகளில் உலகளாவிய பால்சந்தையில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும்: கோயல் நம்பிக்கை

புது தில்லி, செப்.16

வளரும் நாடுகளில் உள்ள சிறிய பால்பண்ணைகளை கூடுதல் உற்பத்தியுடன், நீடிக்கவல்ல, தரம் மிக்க, லாபகரமானதாக மாற்றுவதற்கான, நீடித்த முயற்சிகளை மேற்கொள்ள வழிகாட்டுமாறு சர்வதேச பால்வள கூட்டமைப்பை மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பில் உலக பால்வள உச்சிமாநாடு 2022-ல் அவர் உரையாற்றினார்.

இந்தியாவின் மாறுபட்ட பருவநிலைகளை, ஆய்வு செய்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது உலக தரங்களுடன் உலகளாவிய கரியமில வாயு வெளியேற்ற விதிகளையும் ஒழுங்குபடுத்த நமக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.

உலகின் பால் பொருட்களின் மிகப் பெரிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த அமைச்சர், உலகின் பால் உற்பத்தியில், சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது என்று கூறினார். மகத்தான சர்வதேச ஈடுபாடு, அரசு, கூட்டுறவுத்துறை மற்றும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் உறுதியான முன்முயற்சி ஆகியவற்றால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய பால்சந்தையில் இந்தியாவின் பங்கு கணிசமான அளவு அதிகரிக்கும் என்று பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். இது இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மாபெரும் பயனை தரும் என்றும் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் கூடுதல் வருவாயை வழங்கும் என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

நேர்மையான விவாதங்கள் நடந்த போது வளரும் நாடுகளின் அக்கறைகள் குறித்து வளர்ச்சி அடைந்த நாடுகளின் பல பகுதிகள் மிகவும் உணர்வுவயப்பட்டதாக இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

Spread the love