September 27, 2022

லிபர்டைன்-அசோக் லேலண்ட் இடையே ஒப்பந்தம்

சென்னை, செப்.12

தனது கனரக வாகன என்ஜின்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மின்சார ஜெனரேட்டர்களைத் தயாரித்து வரும் பிரிட்டனின் லிபர்டைன் நிறுவனத்துடன் அசோக் லேலண்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனைச் சேர்ந்த லிபர்டைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தாத, செயல்திறன் அதிகம் மிக்க, எத்தகைய எரிபொருளுக்கும் மாறிக்கொள்ளக் கூடிய அதிநவீன மின்சார ஜெனரேட்டர்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து வருகிறது. லிபர்டைனின் தொழில்நுட்ப மேன்மையைப் பயன்படுத்தி, அசோக் லேலண்ட் நிறுவன வர்த்தக வாகன என்ஜின்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அசோக் லேலண்டு – லிபர்டைன் இடையிலான இந்த கூட்டுறவு, எதிர்காலத்தில் செயல்திறன் மிக்க, வேறுபட்ட எரிபொருளில் இயங்கக் கூடிய வர்த்தக வாகன என்ஜின்களை உருவாக்கி, சிறப்பான சரக்குப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Spread the love