February 3, 2023

ரூ13.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்
நெல் சேமிப்பு கிட்டங்கி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மதுரை, நவ.24

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக ரூபாய் 13.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கி பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு மட்டும் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 143 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு 1.38 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கிகளில் சேமிக்கப்படுகின்றன. சில நேர்வுகளில் கனமழையின் காரணமாக திறந்தவெளியில் சேமிக்கப்படும் நெல் மணிகள் மழையில் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு மாண்புமிகு முதல்வர் விவசாயிகள் நலனை உறுதி செய்திடும் நோக்கில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மணிகளை சேமித்திட கூடாது என அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் கிராமத்தில் ரூபாய் 13.20 கோடி மதிப்பீட்டில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளலவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இத்தகைய சேமிப்பு கிட்டங்கிகள் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்மணிகளை பாதுகாப்பாக சேமித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக நெல் சேமிப்பு கிட்டங்கிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Spread the love