மும்பை, ஜன.7
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், வங்கிகளிடம் ரூ.7,000 கோடி அவசரக் கடன் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட 3வது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. இங்கிலாந்தின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் இணைந்து இந்நிறுவனத்தை நிர்வகிக்கிறது. இந்நிறுவனம் கடும் நஷ்டத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவுகளின் படி நிறுவனத்தின் கடன் அளவு ரூ.2.2 லட்சம் கோடி. இதன் பங்கு ஒன்றின் விலை 8 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகிறது. நிறுவனத்தின் நிகர மதிப்பு நெகடிவில் ரூ.76,416 கோடியாக இருக்கிறது. அதாவது சொத்துக்களை விட கடன் அதிகம் உள்ளது.
தடையில்லாத சேவைக்கு டவர் கட்டமைப்பு முக்கியம். வோடபோனுக்கான டவர் கட்டமைப்பை இண்டஸ் டவர் நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்நிறுவனத்திற்கு வோடபோன் ரூ.7,500 கோடி பாக்கி வைத்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.250 முதல் ரூ.300 கோடியாக உள்ளது. இண்டஸ் நிறுவனம் முன்னதாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் டவர் சைட்டுகளுக்கான அனுமதியை ரத்து செய்வதாக எச்சரித்திருந்தது. இதனையடுத்து தற்காலிகமாக பணம் செலுத்துவதை ஒத்திவைப்பதாக அறிவித்தது. அதனை இண்டஸ் டவர் ஏற்றுக்கொண்டது.
ஜனவரியிலிருந்து நடப்பு பில் தொகையை நூறு சதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டது. டிசம்பர் 31, 2022 வரையிலான நிலுவைத் தொகையையும் இந்த மாதத்திலிருந்து செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இதற்காக எஸ்பிஐ, பஞ்சாப் நேசனல் வங்கி, எச்டிஎப்சி மற்றும் ஐடிஎப்சி, பர்ஸ்ட் ஆகிய வங்கிகளை அணுகி ரூ.7,000 கோடி கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.