October 3, 2022

ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது எஸ்பிஐ

State Bank of India

மும்பை, செப்.15

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் பங்குகள் கடந்த 3 மாதங்களாக உயர்ந்து வந்த நிலையில் அதன் சந்தை மதிப்பு முதல் முறையாக ரூ.5 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டின் 3வது வங்கியாக எஸ்பிஐ இந்த இடத்தை அடைந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பங்குச்சந்தையில் எஸ்பிஐயின் பங்குகள் 2 சதத்திற்கு மேல் உயர்ந்து ரூ.570ஐ கடந்ததால் பொதுத் துறை வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4.95 லட்சம் கோடியிலிருந்து உயர்ந்து ரூ.5 லட்சம் கோடியை கடந்தது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு எஸ்பிஐ வந்துள்ளது. முதல் இடத்தில் ரூ.17 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை உள்ளன.

மேலும், வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்பிஐ ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி ரூ.8.4 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. ரூ.6.3 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ஐசிஐசிஐ வங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 3 மாதங்களாக வங்கிப் பங்குகளில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனால் எஸ்.பி.ஐ., வங்கி 26 சதம் அதிகரித்தது. ஐசிஐசிஐ பங்குகள் 32 சதவீதம் உயர்ந்தது. எச்டிஎப்சி வங்கி 15 சதம் உயர்ந்தது. பொதுத்துறை வங்கிகளில் ஆரோக்கியமான ரீடெயில் போர்ட்போலியோ மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிறந்த செயல்பாட்டு அளவீடுகளைக் எஸ்பிஐ கொண்டுள்ளது. அதன் வலுவான துணை நிறுவனங்கள் வங்கிக்கு மதிப்பு சேர்க்கின்றன.

Spread the love