October 3, 2022

ரூ.2,000 கோடி திரட்டகிறது டாடா ஸ்டீல்

மும்பை, செப்.16

மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்டப் போவதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி மூலதனம் திரட்ட இயக்குநர்களைக் கொண்ட குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, இரண்டு பிரிவுகளில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 5,000 கடன் பத்திரங்கள், மொத்தம் ரூ.500 கோடியைத் திரட்டும் வகையில் வெளியிடப்படும். முதல் பிரிவுக்கான ஒதுக்கீடு வரும் 20ம் தேதி மேற்கொள்ளப்படும். அதன் முதிர்வு தேதி, 2027ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியாகும். இரண்டாவது பிரிவில், மேலும் ரூ.1,500 கோடி திரட்டுவதற்காக, தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 15,000 கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். அதன் ஒதுக்கீடும் வரும் 20ம் தேதி மேற்கொள்ளப்படும். எனினும், அந்த கடன் பத்திரங்களுக்கான முதிர்வு தேதி 2032ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியாகும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love