February 3, 2023

ரூ.15,610 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மின்னணு வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் டெக்னாலஜி, ஆக்ஸிஜன் தொழிற்சாலை உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் பரவலான முறையில் அமையக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது. மின்னணுக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் நிறைய முதலீடுகள் வந்துள்ளது. மேலும் பல முதலீடுகள் தென் தமிழகத்திற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Spread the love