November 29, 2022

ரூ.100 கோடி கட்டாய மூலதன விதியில் தளர்வு ஐஆர்டிஏஐ பரிந்துரை செய்தது

புது தில்லி, நவ.7

புதிய காப்பீட்டு நிறுவனம் குறைந்தபட்சமாக ரூ.100 கோடி மூலதனத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐஆர்டிஏஐ ஆணையத்தின் தலைவர் தெபாசிஷ் பாண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

காப்பீட்டுத் துறையில் நுழையும் நிறுவனம் ரூ.100 கோடி குறைந்தபட்ச மூலதனம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சிறு, தனித்துவமிக்க காப்பீட்டு நிறுவனங்களால் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், அந்தக் கட்டாய விதியைத் தளர்த்தினால், காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி மேம்படும். வங்கித் துறையில் சிறு வங்கிகள் உள்ளது போல, காப்பீட்டுத் துறையிலும் சிறு நிறுவனங்கள் உள்ளன. அத்தகைய நிறுவனங்களும் காப்பீட்டு சந்தையில் செயல்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மேலும், ரூ.100 கோடி கட்டாய மூலதன விதியைத் தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலதனத்தைப் பொருத்து ஒழுங்காற்று விதிகளை வகுப்பது தொடர்பாகவும் மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், மோட்டார் வாகனத் துறை, சொத்துகள் உள்ளிட்டவற்றில் காப்பீட்டு நடைமுறைகளை மேம்படுத்த கட்டாய மூலதன தளர்வு உதவும். காப்பீடு சார்ந்த சேவைகள் அனைத்தையும் பீமா சுகம் என்ற ஒரே வலைதளத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வலைதளம் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு சார்ந்த சேவைகள் சிறப்பான முறையில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love