January 26, 2023

ரூ.1.80 கோடியில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

நவ.28

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக ஊராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒரு முன்மாதிரி பள்ளியாக திகழ்ந்து வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவியர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியான இப்பள்ளியில் பயிலும் மாணவியர்களின் நலனுக்காக மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதி, டைடல் நிறுவன சமூக பங்களிப்பு நிதி என ஒருங்கிணைத்து மொத்தம் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியர்கள் மட்டுமே விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தினை பொய்யாக்கும் வகையில் இப்பள்ளி மாணவியர்கள் கல்வி, விளையாட்டு என அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறார்கள் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். தொடர்ந்து, அமைச்சர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 ஊராட்சிகளில் சுற்றுப்புற தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Spread the love