December 9, 2022

ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்: அனாரோக் தகவல்

புது தில்லி, அக்.29

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் வீடு-மனை வர்த்தகத் துறையில் தனியார் பங்கு முதலீடு 40 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்தத் துறை ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் வீடு-மனை வர்த்தகத் துறையில் தனியார் பங்கு முதலீடு 280 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 200 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் கால கட்டத்தில் வீடு-மனை வர்த்தகத் துறையில் தனியார் பங்கு முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23ம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில், முந்தை நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் வீடு-மனை வர்த்தகத் துறையில் உள்நாட்டு முதலீடுகள் 45 சதம் அதிகரித்துள்ளன. அதே நேரம், வெளிநாட்டு முதலீடுகள் 36 சதம் அதிகரித்துள்ளன. இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் வீடு-மனை வர்த்தகத்தின் அலுவலக சொத்துக்கள் பிரிவில் தனியார் முதலீடுகள் 186.2 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு கிட்டத்தட்ட சமமானது.

இந்தப் பிரிவு வர்த்தகம் கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில், கொரோனா நெருக்கடி மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து பணியாற்றியதால் இந்த நிலைமை ஏற்பட்டது. தற்போது அந்த நெருக்கடி நீங்கிய நிலையில், வீடுகளுக்கான தேவையும் ஆரோக்கியமாக உள்ளது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டிய வீடு-மனை வர்த்தகப் பிரிவில் குடியிருப்பு வீடுகள் பிரிவு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்தக் காலட்டத்தில் வீடுகள் பிரிவில் மட்டும் 37.2 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டது. வீடு-மனை வர்த்தகத் துறையில் தனியார் பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் போக்கு தொடர்ந்தால், அந்தத் துறையின் வளர்ச்சிக்கு அது மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று அனாரோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love