January 23, 2023

ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதிக்கு விரைவில் தார் சாலை வசதி அமைக்கப்படும்: அமைச்சர்

நாமக்கல், டிச.8

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.40.78 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 2 புதிய திட்டப்பணிகள் ரூ.27.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியினை
சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:

அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தும் எல்லாருக்கும் கிடைக்கும் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படுகின்றன. ராசிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை விரைவில் அமைய உள்ளது. மேலும் ராசிபுரத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் கணினி உள்ளிட்ட உயர்கல்வி, பொறியியல் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.

ஏற்கனவே போதமலைக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியில் நிலம் அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டுமென நூற்றுக்கணக்கான மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அவர்களுக்கு வெகு விரைவில் நிலம் அளவீடு செய்து பட்டா வழங்கப்படும். தமிழக அரசு வேலைவாய்ப்பு, அடிப்படை திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

Spread the love