January 22, 2023

ரஷியாவின் ஏகே-203 துப்பாக்கிகள்
இந்தியாவில் உற்பத்தி தொடக்கம்

புது தில்லி, ஜன.18

இந்தியாவில் ரஷியாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்தோ-ரஷியா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரஷியாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகளைத் தயாரிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து ரஷிய அரசின் ராஸ்டெக் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தோ-ரஷியா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை தயாரித்துள்ளது. அவற்றை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பை தொடங்கியதன் மூலம், இந்திய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு வசதியான, உயர்தர, நவீன சிறிய ரக ஆயுதங்கள் பிரவேசிக்கும். சிறந்த பணிச்சூழல், துப்பாக்கிச்சூடு வீரர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தன்மை, உயர் செயல்திறன் பண்புகள் ஆகியவற்றை இந்த வகை துப்பாக்கி ஒருங்கிணைக்கிறது. இது உலகின் சிறந்த தாக்குதல் துப்பாக்கிகளில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love