October 3, 2022

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமல்ல வெளியுறவு செயலர் வினய் குவாத்ரா விளக்கம்

புது தில்லி, செப்.17

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது இரு நாட்டு அரசுகள் இடையிலான ஒப்பந்தம் அல்ல என்றும், இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலானது என்று மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தில்லியில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ரஷிய எண்ணெய்க்கு அதிகபட்ச விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூறுவது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில், இந்தியா அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.

நாட்டின் எரிபொருள் தேவை அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் இறக்குமதியைத்தான் அதிகம் நம்பியுள்ளோம் என்றார். இந் நிலையில் நமது எரிபொருள் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள ரஷியாவிடம் இருந்து கூடுதலாக இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம்தான் என்றார்.

மேலும், உக்ரைன் மீது ரஷி யா போர் தொடுத்ததால் மேற்கத்திய நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்தன. இதனால், சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதையடுத்து, ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா 50 மடங்கு அதிகரித்தது. இப்போதைய நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதம் ரஷியாவிடம் இருந்து வருகிறது. இதற்கு முன்பு 0.2 சதம் மட்டுமே அந்நாட்டிடம் இருந்து பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love