December 8, 2022

யூகோ வங்கியின் செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பு

மும்பை, நவ.7

மத்திய அரசுக்குச் சொந்தமான யூக்கோ வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 2 மடங்குகளுக்கு மேல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து யூகோ வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.504.52 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் இரண்டரை மடங்காகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.205.39 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் செயல்பாட்டு வருவாயும் ரூ.4,655.86 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.4,964.84 கோடியாக உள்ளது. அதேபோல், வங்கியின் வட்டி வருவாய் ரூ.3,719.79 கோடியிலிருந்து ரூ.4,184.89 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் மொத்த வாராக் கடன் 3.37 சதவீதத்திலிருந்து 1.99 சதவீதமாகக் குறைந்துள்ளது என யூகோ வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love