November 29, 2022

யுபிஐ ஆட்டோபே வசதி: கூகுள்பே அறிமுகம்

மும்பை, நவ.16

போன் பில் போன்ற மாதந்தோறும் செலுத்த கூடிய சந்தாக்களை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த வழி செய்யும் யுபிஐ ஆட்டோபே அம்சம், கூகுள்பே செயலியில் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: நாடு முழுவதும் கடந்த 2020 , ஜூலையில் தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா யுபிஐ ஆட்டோபே வசதியை அறிமுகம் செய்தது. மேலும், இந்த அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சந்தா செலுத்துவதற்கு, ஏதேனும் யுபிஐ செயலியை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த அனுமதிக்கும்.

இதன்படி, பயனர்கள் கூகுள்பிளே பில்லிங்கை பயன்படுத்தி சந்தாத் திட்டத்தை தேர்ந்தெடுத்த பிறகு யுபிஐ உடன் பணம் செலுத்தி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவை வசதிகளுடன், யுபிஐ ஆட்டோபே வசதியும் இனி பயனர்களுக்கு கிடைக்கும். இந்தியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கூகுள் பிளே ரீடெய்ல் மற்றும் பேமென்ட்ஸ் ஆக்டிவேசன் தலைவர் சவுரப் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுபிஐ ஆட்டோபேயின் அறிமுகம், கூகுள் சந்தா அடிப்படையிலான வாங்குதல்களுக்கு யுபிஐ சேவையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பலருக்கு பயனுள்ள , மகிழ்ச்சிகரமான சேவைகளை அணுக உதவுகிறது. அதுமட்டுமின்றி, உள்ளூர் டெவலப்பர்களுக்கு, கூகுள் பிளேயில் சந்தா அடிப்படையிலான வர்த்தகத்தை வளர்க்க உதவுகிறது. செயலிகள், செயலி உள்ளடகங்களுக்கு மக்கள் பணம் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த, உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் பயனுள்ள கட்டண முறைகளை சேர்த்து வருகிறோம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love