October 4, 2022

யுஏஇக்கு 1,400 பள்ளிப் பேருந்துகள்
அசோக் லேலண்ட் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை, செப்.2

ஹிந்துஜா குழுமத்தின் முக்கிய அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 1,400 பள்ளிப் பேருந்துகளை தயாரித்து அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இவை சுமார் ரூ.600 கோடிக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: எமிரேட்ஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் எஸ்டிஎஸ் குழுமம் மூலம் இந்த பேருந்துகள் வழங்கப்பட இருக்கின்றன. பேருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் 4வது பெரிய நிறுவனமாக அசோக லேலண்ட் விளங்குகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் காய்மாவில் மட்டும்தான் பேருந்துகளைத் தயாரிக்கும் ஆலை உள்ளது. உதிரி பாகங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகளை முழுமையாக்கி வழங்க அசோக் லேலண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் தயாரிப்பு தரத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, முக்கியமாக குழந்தைகள் பயணிக்கும் பள்ளிப் பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று அசோக் லேலண்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் அந்நாட்டுக்கு மிக அதிகமான பள்ளிப் பேருந்துகளை வழங்கும் நிறுவனம் என்ற பெருமையும் அசோக் லேலண்டுக்கு கிடைத்துள்ளது.

Spread the love