December 9, 2022

மொத்த விலை பணவீக்கம் 8.39 சதமாக சரிவு – மத்திய அரசு தகவல்

புது தில்லி, நவ.15

கடந்த அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 8.39 சதமாக குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் தாதுக்கள், தாது எண்ணெய்கள், உலோகம் அல்லாத தாதுப் பொருள்கள், அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததால், கடந்த அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 8.39 சதமாக குறைந்தது. இதன்மூலம் தொடர்ந்து 5வது மாதமாக இந்தப் பணவீக்கம் சரிந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த விலை பணவீக்கம் 10 சதத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பணவீக்கம் 7.89 சதமாக இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 11.03 சதமாக இருந்த உணவுப் பொருள்கள் பணவீக்கம், அக்டோபர் மாதம் 8.33 சதமாக குறைந்தது. கடந்த செப்டம்பரில் 39.66 சதமாக இருந்த காய்கறிகள் பணவீக்கம், அக்டோபரில் 17.61 சதமாக சரிந்தது. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 23.17 சதமாகவும், உற்பத்திப் பொருள்கள் பணவீக்கம் 4.42 சதமாகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love