புது தில்லி, டிச.30
பார்தி ஏர்டெல்’ நிறுவனம், 5ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் பெற விரும்பவில்லை என்றும், அதன் மூலதன செலவை அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஏர்டெல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் 5ஜி சேவைகளுக்காக, பிரீமியம் கட்டணம் எதுவும் விதிக்க விரும்பவில்லை. பல நாடுகளில் இம்முயற்சி வெற்றியடையவில்லை என்பதால், நாங்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்க விரும்பவில்லை.
மேலும், நிறுவனம் அதன் மூலதன செலவை 10 – 15 சதம் அளவுக்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக, நிறுவனத்தின் சராசரி ஆண்டு மூலதன செலவு 24 – 25 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொபைல் ஆன்டெனா, பைபர், பிராட்பேண்டு, தரவு மையங்கள் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பார்தி ஏர்டெல், 5ஜி சேவைகளுக்காக பிரீமியம் கட்டணம் எதுவும் விதிக்க விரும்பவில்லை. ஆனால், பொதுவாக நாட்டில் மொபைல் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் என தெரிகிறது. எவ்வளவு அதிகரிக்கும் என்பதை சந்தைதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.