February 3, 2023

முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள் உள்ளன
மக்களவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி, டிச.10

முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளதாவது:

முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி இளநிலை அதிகாரி பணியிடங்கள் உள்பட ராணுத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளன. கடந்த செப்.30ம் தேதி நிலவரப்படி, கடற்படையில் 11,587 வீரர்களுக்கும், நவ.1ம் தேதி நிலவரப்படி விமானப் படையில் 5,819 வீரர்களுக்கும் காலியிடங்கள் உள்ளன.

பாதுகாப்பு படைவீரர்கள் அக்னிபத் திட்டத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். முப்படைகளிலிலும் ஆண்டுக்கு 60,000 காலிப்பணியிடங்கள் ஏற்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றினால் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ராணுவத்தில் 1.08 லட்சம் வீரர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் நிலைமை மேம்பட்டுள்ளதையடுத்து, ஆள்சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால் இந்தக் காலியிடங்கள் விரைவில் குறையும் எனத் தெரிவித்தார்.

Spread the love