December 8, 2022

முதலீட்டாளர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில்
திட்டங்களை மாற்றவேண்டும்: எல்ஐசிக்கு அரசு அறிவுறுத்தல்

புது தில்லி, அக்.27

எல்ஐசி நிறுவனம், சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில், தன்னுடைய திட்டங்களுக்கான உத்தியை மாற்றி அமைக்க, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளதாவது:

எல்ஐசி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில், தன்னுடைய திட்டங்களுக்கான உத்திகளை மாற்றி அமைக்க வேண்டும் என, அரசு விரும்புகிறது. எல்ஐசி புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த பின், அதன் வெளியீட்டு விலையை விட குறைந்த விலையிலேயே, பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது. இந் நிறுவனத்தின் வெளியீட்டு விலை ரூ.949 ஆக அறிவிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 17ம் தேதியன்று, ரூ.872 க்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன. தற்போது, கடந்த செவ்வாய் கிழமை நிலவரப்படி, இந்நிறுவன பங்குகள் விலை ரூ.596 ஆக உள்ளது.

இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில், திட்டங்களில் புதிய உத்திகளை, எல்.ஐசி புகுத்த வேண்டும் என அரசு விரும்புகிறது. இளைஞர்கள் விரும்பும் டேர்ம் பாலிசிகளில் கவனம் செலுத்தவும், திட்டங்களை நவீனப்படுத்தவும்; பாலிசிதாரர்களுக்கு குறைந்த அளவில் டிவிடெண்டு வழங்குவதை மேம்படுத்தவும், முயற்சிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Spread the love