November 29, 2022

மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

சென்னை, அக்.27

தமிழக முதல்வரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் (27.10.2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கிணங்க வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட்டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகளான (1) ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை – மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தா தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா (2) தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை (3) திருநர் + நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்வரிடம் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இக்கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஆகியோர் இக்கொள்கைகள் குறித்து விளக்கினர். அதனைத் தொடர்ந்து, தொழில் மயமாதல் கொள்கை குறித்து, மல்லிகா சீனிவாசனும், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து அமலோற்பவநாதனும் மற்றும் திருநர் + நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ்-ம் விவரித்தனர்.

இக்கூட்டத்தில், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் வ. இறையன்பு, குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, (ஒய்வு), சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் த.சு. ராஜசேகர், குறு, சிறு மற்றும்” நடுத்த தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி. அருண்ராய், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love