November 29, 2022

மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம்
0.12 சதம் சரிந்துள்ளது: புள்ளிவரம் தகவல்

மும்பை, நவ.17

இந்திய மாநில அரசுகள் அண்மையில் ஏலத்தில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 0.12 சதம் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் தொடர்ந்து 4 வாரங்கள் சரிந்து வந்தது. எனினும், மாநிலங்களின் புதிய கடன் பத்திரங்களை ஆர்பிஐ கடந்த மாதம் 18ம் தேதி ஏலத்தில் விட்டபோது, அவற்றுக்கான சராசரி வட்டி விகிதம் 0.11 சதம் குறைந்து 7.72 சதமானது.

இந் நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அது 0.12 சதம் அதிகரித்து 7.84 சதமானது. அத்துடன், கடன் பத்திரங்களின் சராசரி தவணைக் காலம் 12 ஆண்டுகளில் இருந்து 13 ஆண்டுகளாக உயர்ந்தது. இந் நிலையில், அண்மையில் விடப்பட்ட ஏலத்தில் மாநில அரசு கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 0.12 சதம் சரிந்து 7.76 சதமாகியுள்ளது.

மேலும், அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டுகால கடன் பத்திரங்களைப் பொருத்தவரை, மத்திய அரசு வெளியிட்ட அந்த வகை கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 0.12 சதம் சரிந்து 7.67 சதமானது. இது, கடந்த வாரம் 7.43 சதமாக இருந்தது. மாநில அரசுகள் வெளியிட்ட 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.83 சதவீதத்திலிருந்து 0.16 சதம் சரிந்து 7.67 சதமாக ஆனது. அந்த வகையில், மாநில அரசுகளின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதங்களுக்கும் மத்திய அரசின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களுக்கும் இடையிலான வேறுபாடு 0.39 சதத்திலிருந்து 0.41 சதமாக அதிகரித்துள்ளது.

இந்த ஏலத்தில் அஸ்ஸாம், பிகார், கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ரூ.8,800 கோடியை ஏலத்தில் திரட்டின. இது, அந்த மாநிலங்கள் ஏற்கெனவே குறித்திருந்த இந்த வாரத்தில் குறிப்பிடப்பட்ட ரூ.12,800 கோடியை விட கிட்டத்தட்ட 31 சதவீதம் குறைவாகும். மாநிலங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வரித் தொகையில் 1.2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்ததால், மாநிலங்களில் பணப் புழக்கம் அதிகரித்தது. இதனால், திட்டமிட்டதைவிட குறைவாகவே கடன் பத்திரங்களை மாநில அரசுகள் ஏலத்தில் விட்டன. இன்னும் சில மாநிலங்கள் ஏலத்தை முழுமையாக தவி??க்கவும் அது வழிவகுத்தது.

இந்த நிதியாண்டில் முதல் முறையாக சந்தைக்கு வந்த கர்நாடகம், ரூ.4,000 கோடிக்கு கடன் பத்திரங்களை ஏலத்தில் வெளியிட்டது. இது, அந்த மாநிலம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதேபோல், பஞ்சாப் மாநிலமும் குறிப்பிட்டதை விட கூடுதலாக ரூ.1,500 கோடியை திரட்டியது. ஒட்டுமொத்தமாக, 26 மாநிலங்கள் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ. 3.8 லட்சம் கோடியை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டியுள்ளன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.4 லட்சம் கோடியை விட சுமார் 5 சதம் குறைவாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love