January 21, 2023

மாதம் 2 வந்தே பாரத் ரயில் தயாரிக்க சென்னை ஐசிஎப் ஆலை தீவிரம்

சென்னை, ஜன.18

சென்னை ஐசிஎப் ஆலை, இனி மாதந்தோறும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

சென்னை பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதுவரையில், எட்டு வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. 9வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் 15 நாட்களில் இந்த ரயிலை தயாரித்து, ரயில்வே வாரியத்திடம் ஐ.சி.எப், ஒப்படைக்க உள்ளது. மேலும், எந்த வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்குவது என்பது குறித்து, வாரியம் முடிவு செய்து, பின்னர் அறிவிக்கவுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஆக., 15ம் தேதிக்குள், நாடு முழுதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஐசிஎப் மட்டுமல்லாமல், இதர ஆலைகளிலும் துவங்க உள்ளது. இந்நிலையில், சென்னை ஐசிஎப் இதுவரையில் மாதம் ஒரு வந்தே பாரத் ரயிலை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், கடந்த டிசம்பரில் முதல் முறையாக, இரண்டு வந்தே பாரத் ரயில்களை தயாரித்து ஒப்படைத்துள்ளோம். அதுபோல், இனி மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்குவதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love