January 22, 2023

மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
திருவள்ளுவர் சிலையை அமைச்சர் திறந்து வைத்தார்

நாமக்கல், டிச.2

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது:

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை காண வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறாக அய்யன் திருவள்ளுவரின் புகழை உலகெங்கும் பரப்பியதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிறுவிய திருவள்ளூர் சிலை மிகவும் இன்றியமையாததாகும். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் 1,330 குறள்கள் உள்ளன. திருக்குறள் என்பது மிகச்சிறந்த உலகப் பொதுமறை. திருக்குறள் ஓர் அறநெறி. இந்நூலில் ஒரு மனிதன் நல்ல மனிதனாக திகழ்வதற்கு தேவையான நல்லொழுக்கங்கள், வீரம், கடமை, அன்பு, நட்பு, சாதுரியம் மற்றும் திறமை உள்ளிட்ட அனைத்து பண்புகள் குறித்தும் இரு வரியில் அழகுற திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். திருக்குறள் அனைவரும் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒரு நூல். திருக்குறள் தமிழருக்கு பெருமை சேர்க்கக்கூடிய நூல். திருக்குறளை இயற்றிய வான் புகழ் கொண்ட அய்யன் திருவள்ளூர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை துபாய்க்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். இதில் மாவட்டத்தில் இரண்டு மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். ?? நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மல்லசமுத்திரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி என்பதில் நமக்கெல்லாம் மிகவும் பெருமை கொள்ளக்கூடியதாகும். இதே போன்று அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் கல்வி பயின்று எதிர் காலத்தில் நல்ல அரசு அலுவலர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களாக வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love