December 9, 2022

பொருளாதார பாதுகாப்பில்லாமல் 69 சதம் இந்தியக் குடும்பங்கள்: மனி9 ஆய்வறிக்கை

புது தில்லி, நவ.11

நாட்டின் 69 சத குடும்பங்கள் பொருளாதார பாதுகாப்பில்லாமல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து, இந்தியக் குடும்பவங்களின் வருவாய், செலவுகள், சேமிப்புகள் தொடர்பாக டிவி9 நெட்வொர்க் சார்பில் ஆய்வு மேற்கொண்டு, “மனி9′ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சராசரியாக 4.2 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ. 23,000-ஆக உள்ளது. இதில் 46 சதத்திற்கு அதிகமான குடும்பங்கள் மாதம் ரூ.15,000-க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுகின்றன.

3 சத இந்தியக் குடும்பங்கள் மட்டுமே ஆடம்பரமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் அதிக வருவாய் கொண்ட உயர்தர மற்றும் உயர்-நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவை ஆகும். மேலும், இந்தியாவின் 70 சதவீத குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் சேமித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கி வைப்புத்தொகை, காப்பீடு, தபால் அலுவலக சேமிப்பு, தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி அந்தக் குடும்பங்கள் தங்களது வருவாயை சேமிக்கின்றன.

இந்தியக் குடும்பங்கள் மேற்கொள்ளும் 64 சத சேமிப்புகள் வங்கிகளில் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரம் 19 சத குடும்பங்கள் மட்டுமே காப்பீடுகள் மூலம் சேமிக்கின்றன. எனினும், குறைந்த வருவாய் பிரிவினரிடையே சேமிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இருந்தாலும், இந்தியாவின் ஐந்தில் இரண்டு குடும்பங்களால் தங்கள் வருவாயை சேமித்து வைக்க முடிவதில்லை.

22 சதவீத இந்திய குடும்பங்கள் பங்குகள், பரஸ்பர நிதிகள், யுலிப் மற்றும் தங்கம், நிலம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்துள்ளன. இதில், நிலம் போன்ற சொத்துகளில்தான் முதலீடு அதிகமாக உள்ளது (18 சதவீதம்). அதனைத் தொடர்ந்து பரஸ்பர நிதிகள் (6 சதவீதம்), பங்குச் சந்தை (3 சதவீதம்), காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது யுலிப்களில் (3 சதவீதம்) முதலீடு செய்யப்படுகிறது.

மேலும், இந்திய குடும்பங்களில் 11 சதம் பேர் மட்டுமே வங்கிகள் அல்லது வங்கியல்லாத நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ளனர். அனைத்து சில்லறை கடன்களிலும், தனிநபர் கடன்கள்தான் மிக அதிகமாக உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வீட்டுக் கடன்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. வருவாய், செலவுகள், சேமிப்பு, கடன்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ள பொருளாதார பாதுகாப்பு குறியீட்டின்படி, ரூ.15,000 மற்றும் அதற்கு மேல் மாத வருவாய் பெறும் 42 சத குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்பின்மை நிலவுகிறது. அத்துடன், ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட குறை வருவாய்ப் பிரிவு குடும்பங்களையும் சேர்த்தால், இந்தியாவின் 69 சத குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்பில்லாத நிலை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love