October 3, 2022

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்

கொழும்பு, செப்.2

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலர் கடன் அளிக்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிடமிருந்து இலங்கை இதுவரை 51 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது. இதில் 28 பில்லியன் டாலரை வரும் 2027க்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

கடந்த ஆகஸ்ட் வரையிலான நிலவரப்படி, எரிபொருளின் விலை உயர்வு காரணமாக இலங்கையின் பணவீக்கம் 64.3 சதமாக பதிவாகியுள்ளது. உணவுப் பொருள் விலை பணவீக்கத்தை பொருத்தமட்டில் சர்வதேச அளவில் இலங்கை 5வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அதன் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடனை கடந்த ஏப்ரலில் திருப்பி செலுத்த தவறிய நிலையில், சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையில் ஈடுபட்டது. ஐஎம்எஃப்-இலங்கை அதிகாரிகள் அளவில் நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கைக்கு அடுத்த 48 மாதங்களில் 2.9 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் கடனுதவி செய்யப்படுவதாக ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love