December 9, 2022

பொதுத்துறை வங்கி அதிகாரிகளை
சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு

புது தில்லி, அக்.27

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மத்திய அரசு துறையில் முக்கியமான பணியிடங்களில் உள்ள அதிகாரிகளை, விதிமுறைப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வங்கிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணிபுரியும் அதிகாரிகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஊழலை தடுப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், “பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் சில அதிகாரிகள் நீண்டகாலமாக முக்கியமான பதவிகளை தொடர்ந்து வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசயத்தில் சுழற்சி இடமாற்றம் தொடர்பான ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலை அரசு துறைகள் பின்பற்றாத செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, ஊழலை தடுக்கும் பொருட்டு, முக்கியமான பதவிகளில் தொடர்ந்து வகிக்கும் அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக தயாரிக்க வேண்டும்.

3 ஆண்டு இடைவெளிக்கு ஒருமுறை, முக்கியமான பதவிகளை வகிப்பவர்களை அடையாளம் கண்டு, விதிவிலக்கு இல்லாமல், சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love