September 27, 2022

பேருந்துகளில் ஒரே மாதிரியான சார்ஜிங் வசதி அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தல்

புது தில்லி, செப்.14

வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியான மின்னேற்று வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு துறை அதிகாரிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தில்லியில் மைன்ட்மைன் நிறுவன மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் வெவ்வேறு விதமான மின்னேற்று வசதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் சிக்கல் எழுவதாக ஹிமாசல பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் புகார் தெரிவித்தார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியான மின்னேற்று வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும், மக்கள் அதிக கார்கள் வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது என்றார்.

மேலும், மின்சார வாகனங்களின் விலை அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் சரக்குப் போக்குவரத்துச் செலவினம் தற்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 முதல் 16 சதமாக உள்ளது. இதனை 2024ம் ஆண்டுக்கு முன்பாக 10 சதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், வரும் காலத்தில் பசுமை ஹைட்ரஜன்தான் வாகன எரிபொருளாக இருக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Spread the love