January 28, 2023

புதிய பணியாளர் சேர்ப்புக்கு
71,000 நியமன கடிதங்கள்
பிரதமர் மோடி விநியோகித்தார்

புது தில்லி, நவ.22

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் விநியோகித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் போது திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 45-க்கும் அதிகமான நகரங்களில் 71,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்றும் இதனால் புதிய சகாப்தத்தில் ஏராளமான குடும்பங்கள் மகிழ்ச்சியடையும் என்றும் கூறினார். தந்தேராஸ் நாளில் இளைஞர்களுக்கு 75,000 நியமன கடிதங்களை மத்திய அரசு வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. பணிநியமனம் பெற்ற அரசு ஊழியர்களை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள், தங்களின் பங்கினையும், பணிகளையும் விரிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தங்களின் கடமைகளை செய்யும் போது திறன் கட்டமைப்பில் நிலையான கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக உலகளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பிரதமர் எடுத்துக்காட்டினார். இந்த சிக்கலான தருணத்திலும் கூட, இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மீது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று அவர் கூறினார். நிபுணர்களின் கருத்துப்படி, சேவைத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது; விரைவில் இது உலக அளவிலும் உற்பத்தி குவி மையமாக மாறும் என்று பிரதமர் கூறினார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற முன்முயற்சிகள் இதில் மாபெரும் பங்களிப்பை செய்யும் என்று கூறிய பிரதமர், நாட்டின் முதன்மையான அடித்தளமாக இளைஞர்களும், திறன்மிக்க மனித ஆற்றலும் இருப்பதாக தெரிவித்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, உள்ளூர் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லுதல் போன்ற இயக்கங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். “

ஸ்டார்ட் அப் தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை, விண்வெளி முதல் ட்ரோன் வரையிலான துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை 80,000 ஸ்டார்ட் அப்கள் வழங்கியுள்ளன. ஒரு சில நாட்களுக்கு முன் இந்தியாவில் தனியார் துறை மூலம் முதலாவது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், விண்வெளித்துறையை தனியாருக்கு திறக்கும் முடிவை பாராட்டியதோடு, இந்திய இளைஞர்களுக்கு இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நியமனதாரர்களை பிரதமர் வலியுறுத்தினார். இந்த நியமன கடிதங்கள் வளர்ச்சியின் உலகில் அவர்களுக்கு நுழைவாயில்களை திறப்பவை மட்டுமே என்பதை எடுத்துரைத்த அவர், அனுபவத்தில் இருந்தும் தங்களை விட மூத்தவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டு தகுதிமிக்கவர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பாதையில் நாம் நண்பர்களாகவும், சக பயணிகளாகவும் இருக்கிறோம்.இந்த தொலைநோக்குப் பார்வையுடன் முன்நோக்கி செல்வதற்கு நாம் உறுதியேற்போம்” என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

Spread the love