September 27, 2022

புதிய சவால்களுக்கு தீர்வுகாண கூட்டு முயற்சிகள் அவசியம்
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புது தில்லி, செப்.9

கொரோனா பரவல் மற்றும் உலகளாவிய மோதல்போக்கு பிரச்னைகளால் எழுந்துள்ள புதிய சவால்களுக்கு பொதுவான தீர்வுகளை எட்ட கூட்டு முயற்சிகள் அவசியம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்தியா, ஜப்பான் இடையிலான உயர்நிலை 2+2 பேச்சுவார்த்தை டோக்கியோவில் நடைபெற்றது. இதில், இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும், ஜப்பான் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் யோசி´மசா ஹயாசி´, பாதுகாப்பு அமைச்சர் யாசுகாஷி ஹமதா ஆகியோரும் பங்கேற்றனர். இதில், எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாவது:

சமீப காலங்களில் குறிப்பாக 2019ல் இருந்து மிக தீவிரமான பிரச்னைகளை நாம் கண்டு வருகிறோம். உலக அளவிலான தற்போதைய மோதல்போக்குகளால் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. எரிசக்தி பாதுகாப்பும் உணவு பாதுகாப்பும் சர்வதேச சமூகத்துக்கு முக்கிய பிரச்னைகளாக மாறியுள்ளது. இதுபோன்ற நேரத்தில், பிற நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், தடுப்பூசிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

நாம் புதிய சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அவற்றுக்கு பொதுவான தீர்வுகளை எட்ட கூட்டு முயற்சிகள் அவசியம். அந்த வகையில், இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டுறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள், ஜனநாயக மாண்புகளில் வேரூன்றியதாகும். நமது நாடுகளின் நல்லுறவுக்கு அண்மைக் காலமாக புதிய அர்த்தம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்ய இப்பேச்சுவார்த்தை அடித்தளமிட்டுள்ளது என்றார் அவர்.

Spread the love