November 29, 2022

பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை நீடிக்கும்- இங்கிலாந்து மத்திய வங்கி கணிப்பு

லண்டன், நவ.10

பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3 சதமாக உயர்ந்து 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 7 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிர்ப்பாகவும் பதிவாகின. மேலும், இங்கிலாந்தில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வட்டி விகிதமானது 0.1%ல் இருந்து 3% வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.1% ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பணவிக்கம் 2 மடங்கு வேகமாக அதிகரிப்பதாக இங்கிலாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டனின் பொருளாதாரம் 2023ம் ஆண்டு முழுவதும் மந்த நிலையிலேயே இருக்கும் என்றும், 2024ம் ஆண்டின் பாதி வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love