October 4, 2022

பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வேண்டும்
இந்திய பொம்மை உற்பத்தியாளர் கோரிக்கை

Christmas toys in market.

புது தில்லி, செப்.20

பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய பொம்மைகள் உற்பத்தித் துறை கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

பிஎல்ஐ திட்டத்தில் பொம்மைகள் தயாரிப்பு துறையையும் இணைக்க வேண்டும் என்று அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஎல்ஐ திட்டத்தில் பொம்மைகள் உற்பத்தித் துறையை இணைப்பதால் அந்தத் துறை வளர்ச்சியடைவதோடு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அது வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது பொம்மைகளின் இறக்குமதி வரியை 20 சதத்திலிருந்து 60 சதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மேலும், தர நெறிமுறைகளை நிர்ணயித்து, ஒவ்வொரு சரக்குப் பெட்டகத்தின் மாதிரி சோதனையையும் கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், தர பரிசோதனையில் வெற்றி பெறாத பொம்மைகளுக்கு விற்பனை உரிமை மறுக்கப்படுகிறது. இந்த சீர்திருத்தங்களால் பொம்மைகள் உற்பத்தித் துறை அதன் பொற்காலத்தை அனுபவித்து வருகிறது. ஆனால், இந்த சீர்திருத்தங்களுடன், பொம்மைகள் உற்பத்தித் துறையை பிஎல்ஐ திட்டத்தில் சேர்ப்பதும் இந்தத் துறைக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

அதுமட்டுமன்றி, இந்தத் துறைக்கென்று பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைப்பதும் துறை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும். துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில், தேசிய பொம்மைகள் உற்பத்திக் கொள்கையை உருவாக்குவதையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தற்போது, பல்வேறு நிறுவனங்களும் பொம்மைகள் உற்பத்தி ஆலைகளுக்கு நிலம் வாங்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்து வருகின்றன என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love