புது தில்லி, டிச.10
தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கம் செய்வதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை புரிவதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், மத்திய அரசின் குடிமக்களை மையப்படுத்திய திட்டங்களை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில், முக்கியமானதாகத் திகழ்கின்றன.
கடந்த 2022, செப்டம்பர் 9-ம் தேதி வரையிலான கணக்குகளின்படி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் 24,58,827 தொலைத்தொடர்பு இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் தற்சார்புக்கான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 4-ஜி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் இடங்களுக்கு 2022 அக்டோபர் மாதம் டெண்டர் விடப்பட்டது.
குறிப்பிட்ட இடங்களில் 4-ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்க இயலாமல் போனது, தனியார் நிறுவனங்களின் கடும்போட்டி, கடன் நிதிச்சுமை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கடுமையாக அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.57,671 கோடிகளையும், எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.14,989 கோடிகளும் இழப்பாக சந்தித்துள்ளன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அவ்விருநிறுவனங்களும் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.